"நாட்டு வெடிகுண்டு வீசிய கொலையாளிகள்"-என்கவுன்டரில் உயிரிழப்பு

செங்கல்பட்டு இரட்டை கொலையில் தொடர்புடைய 2 பேர் நாட்டு வெடிகுண்டு வீசி தப்ப முயன்றபோது என்கவுன்ட்டர் செய்யப்பட்டதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு அடியோடு சீர்கெட்டுவிட்டதாக, சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ள நிலையில், அதனை நிரூபிப்பது போல் நாட்டு வெடிகுண்டுகளுடன் ரவுடிகள் என்கவுன்டர் செய்யப்பட்டுள்ளனர்.

வழக்கு ஒன்றில் தொடர்புடைய கார்த்திக் என்பவர், செங்கல்பட்டு நகர காவல் நிலையத்தில் கையெழுத்திட்டு விட்டு பழைய பேருந்து நிலையம் அருகே வந்து கொண்டிருந்தார்.

அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த மூன்று பேர் கொண்ட கும்பல், நாட்டு வெடிகுண்டு வீசியும், கத்தியால் சரமாரியாக வெட்டியும் கார்த்திக்கை கொலை செய்தது.

இதனிடையே அங்கிருந்து சென்ற கும்பல் மார்க்கெட் பகுதியில் காய்கறி வியாபாரம் செய்து வந்த அவரின் உறவினரான மகேஷ் என்பவரையும் கொலை செய்தது.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், கொலையில் தொடர்புடைய உத்திரமேரூரை அடுத்த திருப்புலிவனத்தைச் சேர்ந்த மாதவன், அவரது தந்தை மற்றும் தீனா என்கிற தினேஷ், மொய்தீன், ஜெஸ்ஸிகா ஆகிய 5 பேரை தேடி வந்தனர்.

இதனிடையே செங்கல்பட்டு தாலுகா காவல்நிலையத்திற்கு உட்பட்ட காட்டுப்பகுதியில் பதுங்கியிருந்த இருவரை போலீசார் பிடிக்க முயன்றுள்ளனர். அப்போது அவர்கள் நாட்டு வெடிகுண்டு வீசி தப்ப முயன்றதாக கூறப்படுகிறது.

இதையடுத்து போலீசார் நடத்திய என்கவுன்டரில் தீனா என்கிற தினேஷ், மொய்தீன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதை தொடர்ந்து, சம்பவ இடத்தில் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் ஆய்வு செய்தார்.

என்கவுன்டரில் கொல்லப்பட்ட இருவரின் சடலங்கள், பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளன. 

என்கவுன்டர் நடந்த இடத்தில் குற்றவாளிகள் பயன்படுத்த வைத்திருந்த 4 நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக செங்கல்பட்டு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

Exit mobile version