புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 21 சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்த வலியுறுத்தி 2வது நாளாக தொடர் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுச்சேரி மாநிலத்திலுள்ள புதுச்சேரி, காரைக்கால், மாஹே, ஏனாம் ஆகிய நான்கு பிராந்தியங்களிலும் அரசின் கீழ் 30 கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இதில் 8 அரசு கல்லூரிகளும், ஒரு சட்டக்கல்லூரியும் 21 சொசைட்டி கல்லூரிகளும் உள்ளன. இதனிடையே, மாநில அரசு கட்டுப்பாட்டில் உள்ள 8 அரசு கல்லூரிகளுக்கும், சட்டக்கல்லூரியில் பணிபுரிவோருக்கும் 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தியது, ஆனால் 21 சொசைட்டி கல்லூரிகளில் பணிபுரியும் 4,500 க்கும் மேற்பட்ட பேராசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமல்படுத்தவில்லை. இந்தநிலையில், பரிந்துரைகளை அமுல்படுத்தக் கோரி அரசுக்கு எதிராக 4,500க்கும் மேற்பட்ட ஊழியர்கள் தொடர் உள்ளிருப்பு போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.