துணிப்பை உள்ளிட்ட பொருட்களின் வரியை குறைக்க வலியுறுத்தல்

மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், துணிப்பை, அலுமினிய பாத்திரங்கள் உள்ளிட்ட பொருட்களின் வரிவிகிதங்களை குறைக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் கலந்துகொண்ட அமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தினார். ஜிஎஸ்டி கவுன்சிலின் 32வது குழுக்கூட்டம் டெல்லியில் நிதியமைச்சர் அருண் ஜெட்லி தலைமையில் நடைபெற்றது. இந்தக்கூட்டத்தில் தமிழகத்தின் சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இன்றையக் கூட்டத்தில் சிறு வணிகர்கள் பயன்பெறும் பொருட்டு பதிவு பெறுவதற்கான 20 லட்சம் ரூபாய் உச்சவரம்பினை உயர்த்துவது, அனைவருக்கும் வீட்டு வசதி என்ற அரசின் நோக்கத்தை நிறைவேற்றும் வகையில் வரிச்சுமை குறைப்பது உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் தமிழகத்தின் சார்பில் கலந்து கொண்ட அமைச்சர் ஜெயக்குமார், தீப்பெட்டி, வெட்கிரைண்டர், துணிப்பை, அலுமினிய பாத்திரங்கள், மீன்பிடி தொழிலுக்கான உபகரணங்கள், சில்லறை வேலை தொடர்பான சேவைகள் மற்றும் மறுசுழற்சி செய்யப்பட்ட பிளாஸ்டிக் மீதான வரிவிகிதங்களை குறைக்க வேண்டுமென வலியுறுத்தினார்.

Exit mobile version