எல்கர், டி காக் அபார சதம்; முதல் இன்னிங்ஸ் சரிவில் இருந்து மீண்டது தெ.ஆப்பிரிக்கா

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரர் டீன் எல்கரின் அபார சதத்தால், தென் ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது.

இரு அணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி 502 ரன்களுக்கு முதல் இன்னிங்சை டிக்ளேர் செய்தது. இதையடுத்து முதல் இன்னிங்சை துவங்கிய தென் ஆப்பிரிக்க அணி, நேற்றைய ஆட்ட நேர முடிவில் 39 ரன்கள் எடுப்பதற்குள் 3 விக்கெட்டுகளை இழந்து திணறியது.

இன்று மூன்றாம் நாள் ஆட்டம் தொடங்கியதும் அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் டீன் எல்கரும், கேப்டன் டு பிளிசிசும் நிதானமாக விளையாடினர். டு பிளிசிஸ் 55 ரன்களுக்கு ஆட்டமிழந்து வெளியேறினார். பின்னர் டீன் எல்கரும், டி காக்கும் ஜோடி சேர்ந்து விக்கெட் இழப்பை தடுத்தனர். பொறுப்புடன் விளையாடிய டீன் எல்கர் சதம் அடித்து அசத்தினார். 160 ரன்கள் எடுத்திருந்த போது அவர் ஆட்டமிழந்தார்.

மற்றொரு வீரர் டி காக்கும் தன் பங்கிறகு சதம் அடித்தார். டீன் எல்கர் மற்றும் டி காக் ஆகியோரின் பொறுப்பான ஆட்டத்தால், தென் ஆப்பிரிக்க அணி சரிவில் இருந்து மீண்டது. 111 ரன்கள் எடுத்திருந்தபோது டி காக் ஆட்டமிழந்தார். இந்திய அணி தரப்பில் தமிழக வீரர் அஸ்வின் 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். மூன்றாம் நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 8 விக்கெட் இழப்பிற்கு 385 ரன்கள் எடுத்துள்ளது.

Exit mobile version