வால்பாறையில் தோட்டத் தொழிலாளியின் வீட்டை இடித்து நாசப்படுத்திய யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தனர்.
கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள ஊசிமலை எஸ்டேட் பகுதியில் 13 யானைகள் இரவு நேரத்தில் புகுந்து அட்டகாசம் செய்துள்ளன.
குடியிருப்பு பகுதியில் நுழைந்த அந்த யானைகள், அங்குள்ள தேயிலை தோட்ட அலுவலகம்,பொருட்கள் வைப்பறை, குடியிருப்பு பகுதி வழியாக சென்று மாடசாமி என்பவர் வீட்டை முற்றுகையிட்டன.
பின்னர் திடீரென்று கோபம் கொண்ட அந்த யானைகள், சுற்றி நின்று கொண்டு ஜன்னல் மற்றும் கதவை உடைத்து சேதப்படுத்தின. தகவல் அறிந்து வந்த வால்பாறை சரக வனத்துறையினர் யானைகளை அங்கு இருந்து விரட்டியடித்தனர்.
வால்பாறையில் யானைகள் நடமாட்டம் அதிகரித்து வருவதால் யானைகளை அடர்ந்த வன பகுதிக்குள் விரட்ட வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.