யானைகள் சிறப்பு புத்துணர்ச்சி முகாம் கோவையில் நாளை துவக்கம்

கோவை தேக்கம்பட்டியில் இந்த ஆண்டிற்கான யானைகள் சிறப்பு புத்துணர்ச்சி முகாம் நாளை துவங்கவுள்ளது. இதற்காக மாநிலம் முழுவதிலும் இருந்து யானைகள் லாரிகளில் தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் கடந்த 2003 ஆண்டு முதல் யானைகள் புத்துணர்ச்சி முகாம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மொத்தம் 48 நாட்கள் நடைபெறும் இந்த முகாமில் தமிழக கோயில்களுக்கு சொந்தமான 22 யானைகள், மடத்துக்கு சொந்தமான 5 யானைகள், புதுவையை சேர்ந்த 2 யானைகள் உள்பட 29 யானைகள் இந்த ஆண்டு பங்கேற்க உள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அறிவித்துள்ளது.

கோவையின் தேக்கம்பட்டி வனபத்ரகாளி அம்மன் கோயிலை ஒட்டிய பவானி ஆற்றுப்படுகையில் நாளை இந்த முகாம் துவங்கவுள்ளது. அமைச்சர் சேவூர் ராமசந்திரன் தொடங்கி வைக்கவுள்ள இந்த முகாமில் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி. வேலுமணி ஆகியோர் பங்கேற்கின்றனர்.

இந்த முகாமில் யானைகளுக்கு சரிவிகித ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகள், பழங்கள், மருந்துகள் வழங்கப்பட உள்ளன. மேலும் பொங்கல் பண்டிகையையொட்டி யானைகள் அணிவகுப்பும் நடைபெறவுள்ளதாக அறநிலையத்துறை அறிவித்துள்ளது. இந்த அணிவகுப்பில் பங்கேற்பதற்காக பல்வேறு பகுதிகளை சேர்ந்த யானைகள் லாரிகளில் தேக்கம்பட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

யானைகள் புத்துணர்வு முகாமில் பங்கேற்பதற்காக மதுரை திருப்பரங்குன்றம் சுப்ரமணிய சுவாமி கோயிலுக்கு சொந்தமான தெய்வானை என்ற யானை புறப்பட்டு சென்றது. முன்னதாக தெய்வானை யானைக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, பின்னர், அதை லாரியில் ஏற்றி முகாமுக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

Exit mobile version