இலங்கையின் புத்த கோவிலில் யானை ஒன்று கொடுமைப்படுத்தப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. பார்த்தவர்களை பதை பதைக்கச் செய்யும் அந்த வீடியோ குறித்த விரிவான தகவல்கள்
இலங்கையில் கொடுமைகளுக்கு ஆளான டிங்கிரி யானையின் புகைப்படம் கடந்த ஆண்டு உலகெங்கிலும் உள்ள மக்களை அதிர வைத்தது.பல்வேறு நாடுகளும் ,அமைப்புகளும் இலங்கைக்கு கண்டனம் தெரிவித்தனர்,இந்நிலையில் டிங்கிரியின் மரணம் உலகையே உலுக்கியது. ஆனால் அதன் பின்னரும் இலங்கையில் யானைகள் மீதான கொடுமைகள் குறையவில்லை.
1946ஆவது ஆண்டில் இலங்கை சுதந்திரம் பெற்றதில் இருந்து இதுவரை அங்கு 311 யானைகள் உயிர் பலியாகி உள்ளதாக விலங்குகள் நல ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். இந்தத் குற்றச்சாட்டுகளை இலங்கை அரசு தொடர்ந்து மறுத்து வருகின்றது.
இந்நிலையில், இலங்கையில் உள்ள பெல்லான்விலா (Bellanwila) என்ற புத்த மதக் கோவிலில் யானை ஒன்று கொடுமைப்படுத்தப்படும் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி உள்ளது. அந்தக் காட்சியில் தோன்றும் நபர்கள், மயான் பிரின்ஸ் என்ற பெயர் கொண்ட யானையை குச்சியால் அடித்தபடியே அதன் காலையும் சுத்தம் செய்கின்றனர். வலி தாங்க முடியாத அந்த யானை எழுந்து நிற்க முடியாமல், படுத்த நிலையிலேயே அவதிப்படுகிறது.
இந்த மயான் பிரின்ஸ் யானை 77 வயதான விமலரத்னா தேரோ என்ற புத்தமதத் துறவியைக் கொன்றதால்தான், இப்படி கொடுமைப்படுத்தப்படுகின்றது என்று இலங்கையில் இருந்து கிடைத்த தகவல்கள் கூறுகின்றன. ஆனால் ஏன் அந்த யானை அடிக்கப்படுகின்றது என்பதற்கான உண்மையான காரணங்கள் வெளியாகவில்லை.
மயான் பிரின்ஸ் யானையை மீண்டும் காட்டுக்குள் விடவேண்டும் என்ற கோரிக்கையில் இலங்கையைச் சேர்ந்த 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டு உள்ளனர். இதனால் உலக அரங்கில் இலங்கைக்கு மீண்டும் அவப்பெயர் எற்பட்டு உள்ளது.