சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகே உள்ள வனப்பகுதியில் தொடர்ந்து இரண்டு நாட்களாக யானைகள் சுற்றி வருவதால் அப்பகுதி மக்கள் பாதுகாப்பாக இருக்க வனத்துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
சேலம் மாவட்டம் காடையாம்பட்டி அருகேயுள்ள குண்டுக்கல் வனப்பகுதிக்கு தருமபுரி மாவட்டம் தொப்பூர் காப்புகாட்டில் இருந்து இரண்டு யானைகள் தஞ்சம் புகுந்தன. இது தொடர்பாக வனத்துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டதை தொடர்ந்து அந்த வனப்பகுதியில் பட்டாசுகளை வெடித்து இரண்டு யானைகளையும் விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.
பட்டாசு சத்தத்தை பொருட்படுத்தாமல் யானைகள் சுற்றி திரிந்துள்ளன. இதனையடுத்து அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் வனப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என வனத்துறை அறிவுறுத்தியுள்ளது. தொடர்ந்து யானைகளை விரட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.