கோத்தகிரி-மேட்டுப்பாளையம் மாநில நெடுஞ்சாலையில் ஒரு கிலோ மீட்டர் நடந்து சென்ற காட்டுயானையால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கடந்த சில நாட்களாக கோத்தகிரி – மேட்டுப்பாளையம் நெடுஞ்சாலையில் காட்டு யானை ஒன்று இரவு நேரங்களில் சாலையில் முகாமிட்டு, போக்குவரத்துக்கு இடையூறாக இருந்து வருகிறது. அந்த வகையில், முள்ளூர் சாலையை கடந்து வனத்திற்குள் செல்ல முயன்ற யானை, வழியில்லாததால் ஒரு கிலோ மீட்டர் சாலையில் பயணித்தது. அப்போது எதிர்பாராத விதமாக மேட்டுப்பாளையத்திலிருந்து இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர்கள் யானையைக் கண்டதும் நிலைத் தடுமாறி சாலையில் விழுந்தனர். சில நொடிகளில் இருசக்கர வாகனத்தை தொட்டு பார்த்த யானை பிறகு மீண்டும் சாலையில் நடந்து சென்றது. இதனால் அப்பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இரவு நேரங்களில் சாலைகளில் யானைகளின் நடமாட்டம் இருப்பதால், வாகன ஓட்டிகள் கவனமுடன் செல்லுமாறு வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.