தாய்லாந்து நாட்டின் தேசியப் பூங்காவில் யானை ஒன்று காரை மறித்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
சுற்றுலா செல்ல உகந்த நாடு என்றால் அது தாய்லாந்துதான். இங்குள்ள காவோ யாய் தேசியப் பூங்கா அருகே சாலையில் கார் ஒன்று வந்து கொண்டிருந்தது. அப்போது, பூங்காவில் இருந்த டியூவா என்ற 35 வயது ஆண் யானை காரை வழிமறித்ததுடன் அதன் மீதும் ஏற முயன்றுள்ளது. அங்கிருந்து தப்பிச் செல்ல காரின் ஓட்டுநர் முயலும்பொழுது, குறுக்கே சென்ற யானை தனது உடலை காரின் மீது வைத்து அமருவதற்கு முயன்றது. நல்ல வேளையாக இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. காரின் பின்புறச் சன்னல், மேற்கூரை மற்றும் நடுப்பகுதி ஆகியவை சேதமடைந்தன.
இதுபற்றி தாய்லாந்து வனத்துறை வெளியிட்டுள்ள விளக்கத்தில், ஈரப்பதம் மற்றும் குளிர்காலச் சூழலில் சுற்றுலாப் பயணிகளை வரவேற்கவே டியூவா வெளியே வந்ததாகத் தெரிவித்துள்ளது. அந்த நடுத்தர வயதுடைய யானை யாரையும் அல்லது எந்த வாகனங்களையும் துன்புறுத்துவது கிடையாது எனக் கூறினர். இந்த சம்பவத்திற்குப் பின்னர், இதுபோன்று மீண்டும் நடக்காமல் இருப்பதற்காகச் சுற்றுலாப் பயணிகள் தங்களது கார்களை யானைகளிடம் இருந்து 30 மீட்டர் தொலைவிலேயே நிறுத்தி விடுங்கள் எனக் கேட்டு கொள்ளப்பட்டுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.