பொள்ளாச்சியில் களைகட்டிய யானைப் பொங்கல்

பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பகத்தில், யானைப் பொங்கல் கொண்டாடப்பட்டது. மாட்டுப் பொங்கலைப்போல், யானைகளுக்குப் பொங்கல் விழா கொண்டாடியது சுற்றுலாப் பயணிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

பொள்ளாச்சி ஆனைமலை புலிகள் காப்பகத்தில், தமிழக வனத்துறை சார்பில் யானைப் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக, கோழிகமுத்தி முகாமில் இருந்து 18 வளர்ப்பு யானைகள் டாப்சிலிப்பிற்கு அழைத்து வரப்பட்டன.

பின்னர், யானைகளுக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செய்யப்பட்டது. அதைத் தொடர்ந்து, அங்குள்ள மலைவாழ் மக்கள் புதுப் பானையில் பொங்கல் வைத்து, அதை யானைகளுக்குப் படைத்து வழிபாடு நடத்தினர்.

பொங்கலுடன் வாழைப்பழம், கரும்பு, தேங்காய் உள்ளிட்ட யானைகளுக்குப் பிடித்த உணவுகளை பொதுமக்கள் அவற்றுக்கு வழங்கினர். அதன்பின்னர், டாப்சிலிப்பில் உள்ள புல் மலையில், யானைகள் ஒன்றன் பின் ஒன்றாக அணிவகுத்து ஊர்வலம் வந்தன.

ஒரே நேரத்தில் அனைத்து யானைகளும் துதிக்கையை உயர்த்தி பிளிறிய காட்சி, அங்கிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. தை திங்களில் மாட்டுப் பொங்கல் கொண்டாடுவதுபோல், யானைகளுக்கும் பொங்கல் கொண்டாடியது சுற்றுலாப் பயணிகளிடம் மகிழ்ச்சியையும், யானைகளின் முக்கியத்துவம் பற்றிய விழிப்புணர்வையும் ஏற்படுத்துவதாக இருந்தது.

Exit mobile version