மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தவர்களில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் உள்ளவர்களுக்கு இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் அந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
நுகர்வோரின் மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின் வாரியம் கடந்த ஆண்டு நவம்பர் 15ஆம் தேதி தொடங்கியது. இதற்கான கடைசி நாள் இன்றுடன் முடிகிறது. இனிமேல் அவகாசம் இல்லை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே ஏற்கெனவே மின் இணைப்புடன் ஆதாரை இணைத்தவர்களில், ஒன்றுக்கு மேற்பட்ட வீடுகள் வைத்திருப்பவர்களுக்கு மாதம் 100 யூனிட் இலவச மின்சாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இந்த மாதம் மின் பயனீட்டு கட்டணம் வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அதில் பலரது வீடுகளுக்கு மானிய மின்சாரம் ரத்து செய்யப்பட்டு, மொத்த மின் பயன்பாட்டு யூனிட்டுக்கும் சேர்த்து கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனால், வீட்டு உரிமையாளர்கள் வாடகைதாரர்களிடம் அந்த தொகையை கேட்கிறார்கள். இதனால், வாடகைக்கு குடியிருப்போர் அதிக கட்டணம் செலுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது.