இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்! மின்வாரியத்தில் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்புமா விடியா அரசு?

60ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்று மின்வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதே போன்று கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்களும், போக்குவரத்து பணியாளர்களும் போராடும் நிலையில் அவர்களையும் கண்டு கொள்ளாத விடியா ஆட்சி மீது, போராட்டக்காரர்கள் அதிருப்தியில் இருந்துவருவது குறித்து அலசுகிறது இன்றைய நியூஸ் ஜெ தலையங்கம்.

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் எப்போதுமே எங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். அவர்களால்தான் திமுக ஆட்சி வருகிறது என்றெல்லாம் நைஸாகப் பேசி அவர்களைத் தங்களின் ஓட்டு வங்கியாக மட்டுமே வைத்திருந்த திமுகவுக்கு எதிராக தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.

மின்வாரியத்தில் சுமார் 60 ஆயிரம் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், கேங்மேன் உள்ளிட்ட பணியாளர்களுக்கு 6 சதவீதம் ஊதிய உயர்வை வழங்கிட வேண்டும், தேர்வு செய்து நிலுவையில் உள்ள 5 ஆயிரம் கேங்மேன் பணியாளர்களுக்கு பணி ஆணை வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர்கள் மத்திய அமைப்பு சார்பாக தமிழகம் முழுவதும் போராட்டத்தில் இறங்கி இருக்கின்றனர். இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கான ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

ஏற்கனவே இருக்கும் மின்வெட்டு பிரச்சனையை சமாளிக்க முடியாத நிலையில், மின் ஊழியர்கள் போராட்டத்தில் இறங்கினால் அது இன்னும் அரசுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் என்னும் அச்சத்தால், போராட்டத்தில் ஈடுபடும் ஊழியர்களை மிரட்டியுள்ள அரசு. பணியாளர் வருகைப் பதிவேட்டை காலை 10.45மணிக்கே அனுப்ப வேண்டும், போராட்டத்தில் ஈடுபட்டால் அந்த நாளுக்கான ஊதியம் கிடைக்காது என முந்தைய நாளே எச்சரித்தது. ஆனாலும் அரசுக்கு எதிராக மின் வாரிய ஊழியர்கள் போராட்டத்தில் குதித்து இருக்கிறார்கள்.

ஸ்டாலின் தலைமையிலான அரசுக்கு எதிராக மின்வாரிய ஊழியர்கள் மட்டுமல்ல, கடந்த சில தினங்களுக்கு முன்பு திமுகவின் தொழிற்சங்கத்தை சேர்ந்தவர்கள் உள்பட பலரும் போக்குவரத்து துறையில் தனியார் மயத்தை கொண்டுவருவதை எதிர்த்து போராடியுள்ளனர். அதே போன்று போக்குவரத்து துறை காலிப் பணியிடங்களை நிரப்பவும் கோரிக்கை எழுப்பி வருகின்றனர். அதே போன்று ஆசிரியர்கள் தரப்பில் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றக் கோரிபோராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். தமிழ்நாடு கல்வித்துறை அலுவலக பணியாளர்கள் மற்றும் பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் சங்கத்தினர், பகுதி நேர ஆசிரியர்கள் என பல்வேறு தரப்பினரும் பணி நிரந்தரம், பதவி உயர்வு உள்ளிட்டவற்றை வலியுறுத்தி திமுக அரசுக்கு எதிராக தொடர் போராட்டங்களை நடத்தி உள்ளனர்.

இந்தப் போராட்டங்களின் காரணமாக ஸ்டாலினின் அரசு விழிபிதுங்கி நிற்கிறது….
அமைச்சர் செந்தில்பாலாஜியிடம் இருந்த மின்துறையை தங்கம் தென்னரசுக்கு கொடுத்த நிலையில் மின்வாரிய ஊழியர்களின் கோரிக்கைகளை அரசு கண்டு கொள்ளுமா? தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றாமல் ஏமாற்றிக் கொண்டிருக்கும் விடியா திமுக அரசு மீது அனைத்து தரப்பினருமே கடுப்பில் இருப்பதாக அரசு ஊழியர்கள் தெரிவிக்கின்றனர்.

– ஆசாத் மற்றும் வினோத் பச்சையப்பன்

Exit mobile version