மின் கட்டணம் உயர்வு! பனைத் தொழிலாளர்கள் பாதிப்பு! கண்டுகொள்ளுமா விடியா அரசு?

tneb

தொடரும் மின்வெட்டு மற்றும் மின் கட்டண உயர்வினால் பனைப் பொருட்கள் தயாரிப்பில் ஈடுபடும் பனை தொழிலாளர்கள் பாதிப்படைந்து வருகின்றனர். விடியா ஆட்சியில் பனை தொழிலாளர்களின் வேதனை குறித்துச் சொல்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் பனைமரங்களை நம்பி தொழில் செய்து வருவோர் அதிக அளவில் உள்ளனர். பனையில் இருந்து கள் இறக்க அரசு அனுமதி அளிக்காத நிலையில் பதநீர் இறக்கி கருப்பட்டி காய்ச்சி விற்பனையில் ஈடுபடுகிறார்கள். அதேபோன்று பனை ஓலைகளைக்கொண்டு, பனை மட்டைகளைக் கொண்டும் பெட்டி, கூடை, சுத்தம் செய்யும் பிரஸ் உள்பட பல்வேறு மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களையும் உற்பத்தி செய்து வருகின்றனர். விடியா ஆட்சியில் அதிக அளவில் பனைமரங்கள் வெட்டப்பட்டு வருவதாலும், மின் வெட்டு மற்றும் மின்கட்டண உயர்வாலும் அவர்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

தென்காசி மாவட்டம் புளியங்குடி அடுத்துள்ள அருணாசலபுரம், வீரசிகாமணி பகுதியில் பனை மட்டைகளைக் கொண்டு பிரஸ் உள்பட பல்வேறு பொருட்களை தயாரித்து வருகின்றனர். இவற்றை தூத்துக்குடிக்கு கொண்டு சென்று கப்பல் மார்க்கமாக ஏற்றுமதியும் செய்து வருகின்றனர். தற்போது விடியா ஆட்சியில் தங்களின் தொழில் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக பனை தொழிலாளர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

பனைமரங்கள் அழிக்கப்படுவதால் பனை மட்டைகளுக்காக பலநூறு கிலோமீட்டர் பயணிக்க வேண்டியுள்ளதாகவும், விலைவாசி உயர்வால் போக்குவரத்துக்கான பெட்ரோல், டீசல் செலவு கட்டுப்படியாகவில்லை என்றும் கூறுகின்றனர். அதுபோல் மின்வெட்டு காரணமாக தொழிலை சரியாக செய்ய முடியாததால் வாழ்வாதாரம் பாதிப்பதோடு உயர்த்தப்பட்ட மின்கட்டணத்தையும் கட்ட முடியவில்லை என்பதும் அவர்களின் வேதனையாக உள்ளது.

அதிமுக ஆட்சியில் மின்வெட்டு பிரச்சனை இல்லை என்றும், மின்கட்டன உயர்வு இல்லை என்றும் நற்சான்று தெரிவிப்பவர்கள், விடியா திமுக ஆட்சியினால் தங்களின் வாழ்வாதாரம் நலிந்துபோயிருப்பதாக கவலை தெரிவிக்கின்றனர். பனைமரங்களை பாதுகாக்கவும், மின்கட்டணத்தை குறைக்கவும் அவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

இதேபோன்று பனை ஏறும் தொழிலில் உடல் உழைப்பு அதிகம் உள்ளதால், 50 வயதிற்கு மேற்பட்ட பனைத்தொழிலாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்க வேண்டும் என்பதும் அவர்களின் கோரிக்கையாக உள்ளது. பனைத் தொழிலாளர்கள் வாழ்வில் விடிவு ஏற்படுத்துமா விடியா ஆட்சி?

– கடையநல்லூர் செய்தியாளர் ஐய்யனார் மற்றும் ஆசாத்.

Exit mobile version