மகாராஷ்டிர மாநிலத்தில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதற்காக மும்பை, நாக்பூர் உள்ளிட்ட நகரங்களில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், ஒப்புகைச் சீட்டு எந்திரங்கள், கட்டுப்பாட்டுக் கருவிகள், அழியா மை ஆகிய பொருட்களைப் பெற்றுக்கொண்ட வாக்குப்பதிவு அலுவலர்கள் அவரவர் பணியாற்றும் வாக்குச்சாவடிகளுக்குப் புறப்பட்டுச் சென்றனர். மகாராஷ்டிரத்தின் 288 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்க உள்ளது. நக்சல் பாதிப்புள்ள மாவட்டங்களில் மத்தியப் படையினர் தேர்தல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். மகாராஷ்டிரத்தில் பாஜக – சிவசேனா கூட்டணிக்கும், காங்கிரஸ் – தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கும் இடையே நேரடிப் போட்டி நிலவுகிறது.
இதேபோல் அரியானாவில் மொத்தமுள்ள 90 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் நாளை ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. அரியானாவில் பாஜக, காங்கிரஸ், இந்திய தேசிய லோக்தள், ஜனநாயக ஜனதாக் கட்சி ஆகியவற்றின் இடையே நால்முனைப் போட்டி நிலவுகிறது. இருமாநிலச் சட்டமன்றத் தேர்தல் தவிரச் சத்தீஸ்கர், உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதிகளிலும் வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்களை எடுத்துச் செல்லும் பணியில் தேர்தல் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.