திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உத்தரவிட முடியாது என்று உச்ச நீதிமன்றம் மறுத்துள்ளது. மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலுடன் தமிழகத்தில் வரும் 18ம் தேதி திருப்பரங்குன்றம், அரவக்குறிச்சி, ஒட்டபிடாரம் ஆகிய தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தக்கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தபோது, அவசரகதியில் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்த முடியாது என்றும், தேர்தல் நடத்த அவகாசம் தேவை என்றும் உரிய நேரத்தில் 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் பதிலளிக்கப்பட்டது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கத்தை ஏற்ற உச்ச நீதிமன்றம், 3 தொகுதிகளுக்கும் இடைத்தேர்தலை நடத்த உடனடியாக உத்தரவிடமுடியாது என்று உத்தரவிட்டது. மேலும், திருப்பரங்குன்றம், ஒட்டபிடாரம், அரவக்குறிச்சி தொகுதிகளில் தேர்தலுக்கு தடையாக இருந்த வழக்குகளையும் முடித்து வைத்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.