இந்திய கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு அக்டோபர் 23 ஆம் தேதி தேர்தல்

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் சவுரவ் கங்குலி, கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் ஆக உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டம் அக்டோபர் 23ஆம் தேதி நடைபெற உள்ளது. அன்றே வாரியத்தின் தலைவர் பதவிக்குத் தேர்தல் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மொத்தமுள்ள 38 கிரிக்கெட் சங்கங்களில் 10 சங்கங்கள் ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பங்கேற்கக் கிரிக்கெட் வாரியம் தடை விதித்துள்ளது.

ஆண்டுப் பொதுக்குழுக் கூட்டத்தில் பெங்கால் கிரிக்கெட் சங்கம் சார்பில் அதன் தலைவரும் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவருமான சவுரவ் கங்குலி பங்கேற்கிறார். இதேபோல் ஐதராபாத் கிரிக்கெட் சங்கம் சார்பில் முகமது அசாருதீனும், டெல்லி கிரிக்கெட் சங்கம் சார்பில் ரஜத் சர்மாவும் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டத்தின் முடிவில் நடைபெறும் தேர்தலில் இந்தியக் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவராக சவுரவ் கங்குலி தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

வாரியத்தின் செயலாளராக அமித் ஷாவின் மகன் ஜெய் ஷாவும், பொருளாளாராக அருண் துமாலும் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். இதேபோல் ஐபிஎல் தலைவராக பிரிஜேஷ் பட்டேல் தேர்ந்தெடுக்கப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. கிரிக்கெட் வாரியத் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்வதற்கு இன்றே கடைசி நாள் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version