ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களையே, நகர்ப்புற தேர்தலிலும் பணி அமர்த்த வேண்டும் என்று அதிமுக சார்பில் மாநில தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமாரிடம், அண்ணா திமுக சட்ட ஆலோசனை குழு உறுப்பினரும் வழக்கறிஞர் பிரிவு இணைச் செயலாளருமான பாபு முருகவேல் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.
அதில், திமுக அரசின் மேல் வெறுப்பில் உள்ள அரசு ஊழியர்கள், அதிமுகவிற்கு வாக்களிக்க தயாரக உள்ளனர் என்றும், அவர்கள் தேர்தல் பணிகளில் ஈடுபடும்போது, அவர்களது தபால் வாக்குகளில் திமுகவினர் தங்கள் அதிகார பலத்தை பயன்படுத்தி, முறைகேடு செய்ய வாய்ப்புள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
அதனால், மாநகராட்சி பகுதிகளை சேர்ந்த அரசு அலுவலர்கள், காவல்துறையினரை தேர்தல் பணிக்கு பயன்படுத்தக் கூடாது என்று வலியுறுத்தி உள்ள அவர், ஊரக உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றிய அரசு ஊழியர்களையும், காவல்துறையினரையுமே நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் பணிகளிலும் ஈடுபடுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், தேர்தல் அலுவலர்களாக பணியாற்றும் அரசு அலுவலர்கள் மற்றும் காவல்துறையினர், தங்களது வாக்குகளை நேரடியாக செலுத்துவதற்கும் வாய்ப்பளிக்க தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.
Discussion about this post