த.மா.கா.வுக்கு சைக்கிள் சின்னம் : வரும் 18-ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க உத்தரவு

தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து, வரும் 18ம் தேதிக்குள் தேர்தல் ஆணையம் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னை உயர் நீதிமன்றத்தில் சைக்கிள் சின்னத்தை மீண்டும் பெறுவது தொடர்பாக, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வழக்கு தொடர்ந்திருந்தார். அதில் தமிழ் மாநில காங்கிரஸ் வாக்கு வங்கியை இழக்கவில்லை என்றும், போதுமான இடங்களில் போட்டியிடாத நிலையில் அங்கீகரிக்கப்பட்ட கட்சி, மீண்டும் தனது சின்னத்திலேயே போட்டியிட உரிமை உள்ளது எனவும் தெரிவித்திருந்தார்.

இந்த வழக்கை நீதிபதிகள் மணிக்குமார், சுப்ரமணியம் பிரசாத் அமர்வு விசாரித்தது. அப்போது ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஞானதேசிகன், தேர்தல் ஆணையம் தங்கள் மனு மீது இன்னும் பதிலளிக்கவில்லை என குற்றம்சாட்டினார். இதையடுத்து, வரும் 18ஆம் தேதிக்குள் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிக்கு நிரந்தரமாக சைக்கிள் சின்னம் ஒதுக்குவது குறித்து, தேர்தல் ஆணையம் தனது முடிவை தெரிவிக்கக்கோரி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Exit mobile version