பிரதமர் மோடி குறித்த திரைப்படத்திற்கு தேர்தல் ஆணையம் தடை விதித்துள்ள நிலையில், படத்தை பார்த்துவிட்டு, தடை குறித்த முடிவை எடுக்குமாறு, தேர்தல் ஆணையத்திற்கு உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.
பிரதமர் மோடியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி, ஓமங் குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தி திரைப்படம், பி.எம் நரேந்திர மோடி. தேர்தல் நேரம் என்பதால், இந்த படத்த வெளியிட எதிர் கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அவர்களின் கோரிக்கையை ஏற்ற தேர்தல் ஆணையம், படத்திற்கு தடை விதித்தது. மேலும், தேர்தல் முடியும் வரை, வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாகும் படங்களை வெளியிடவும் தடை விதித்தது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர்கள், தடையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், படத்தை பார்க்காமல் எப்படி தடை விதித்தீர்கள் என்று தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், படத்தை பார்த்துவிட்டு, தடையை தொடர்வது குறித்து முடிவெடுக்குமாறு, பரிந்துரைத்துள்ளது. படத்தை பார்த்த பின்னர், வரும் 22ம் தேதிக்குள், படத்தை குறித்த தேர்தல் ஆணையத்தின் கருத்தை, சீலிட்ட உறையில் கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது.