அருண் ஜெட்லி மற்றும் சுஷ்மா ஸ்வராஜ் மரணம் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய உதயநிதி, இன்று மாலை 5 மணிக்குள் பதிலளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
தேர்தல் பிரசாரத்தின்போது பெண்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் குறித்து, இழிவாகவும் அவருவருக்கத்தக்க வகையிலும் தி.மு.க. நிர்வாகிகள் பேசி வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். திமுகவினரின் இந்த செயலுக்கு, அரசியல் தலைவர்கள் மட்டுமின்றி, பெண்கள் மற்றும் பொதுமக்கள் கடும் கண்டனங்களை தெரிவித்தனர். இதேபோன்று, தாராபுரத்தில் பிரசாரம் மேற்கொண்ட உதயநிதி, மறைந்த மத்திய அமைச்சர்கள் சுஷ்மா ஸ்வராஜ் மற்றும் அருண் ஜெட்லி ஆகியோர், பிரதமர் மோடியின் சித்ரவதை காரணமாகவே உயிரிழந்ததாகக் கூறியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், உதயநிதியின் சர்ச்சை பேச்சு குறித்து, பாஜக நிர்வாகிகள் தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர். இந்த புகாரின் அடிப்படையில் உதயநிதி ஸ்டாலினுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ள தேர்தல் ஆணையம், இன்று மாலை 5 மணிக்குள் பதிலளிக்குமாறு தெரிவித்துள்ளது. தவறும் பட்சத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.