தேர்தலில், மாற்றுத்திறனாளிகள், முதியோர்கள், தபால் வாக்குப்பதிவு செய்வதற்கான புதிய நடைமுறைகளை, தேர்தல் ஆணையம் அறிமுகம் செய்துள்ளது.
இது தொடர்பாக அனைத்து மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு, இந்திய தேர்தல் ஆணையம் அனுப்பியுள்ள கடிதத்தில், தபால் வாக்குப்பதிவை தேர்வு செய்யும் முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கு, தேர்தல் வாக்குப்பதிவு நாள் அறிவிக்கப்பட்ட 5 நாட்களுக்குள்12 டி படிவத்தை வாக்குச்சாவடி அதிகாரி எடுத்துச் சென்று, அதனை பூர்த்தி செய்து வரவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர், அந்த படிவங்கள் தேர்தல் நடத்தும் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டில் தபால் வாக்கு பதிவு செய்வது, காணொலி வாயிலாக பதிவு செய்யப்பட்டு, வெளிப்படைத்தன்மை உறுதி செய்யப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள பீகார் மாநிலத்தில், ஊடகங்கள், பொது சமூக அமைப்புகளிடம் இருந்து பெறப்பட்ட பரிந்துரைகள் அடிப்படையில், இந்த புதிய நடைமுறைகளை தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. இந்த நடைமுறை அடுத்து வரவுள்ள அனைத்து தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்களுக்கும் பொருந்தும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.