இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? –  உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது.

திருவாரூர் மற்றும் திருப்பரங்குன்றம் ஆகிய தொகுதிகளின் எம்எல்ஏக்களான திமுக முன்னாள் தலைவர் கருணாநிதி மற்றும் அதிமுகவை சேர்ந்த போஸ் ஆகியோர் மரணம் அடைந்த நிலையில் அந்த தொகுதிகள் காலியாக உள்ளன.

இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளையில் கே.கே ரமேஷ் என்பவர், இடைத்தேர்தல் குறித்து கேள்வி எழுப்பி மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கை இன்று விசாரித்த உயர்நீதிமன்ற மதுரை கிளை, இரண்டு தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்த எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளது.

இடைத்தேர்தல் குறித்து தமிழக தேர்தல் அதிகாரி வரும் 26ம் தேதிக்குள் விளக்கம் அளிக்க நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர். மேலும் இடைத்தேர்தல் குறித்து அட்டவணை ஏதும் இருந்தால் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளனர்.

Exit mobile version