சேலத்தில் முதியவர்கள் கொலை செய்யப்பட்ட வழக்கில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காணப்பட்ட 8 பேரை பிடித்து தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
சேலம் பொன்னம்மாபேட்டை சடகோபன் தெருவை சேர்ந்தவர் அங்கமுத்து வயது 85 இவர் நேற்று விடியற்காலை பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள மாநகராட்சி வணிக வளாகத்தில் உள்ள ஒரு கடை முன்பு உறங்கி கொண்டிருந்தார். அந்த வணிக வளாகத்தில் கடைகள் பூட்டப்பட்டிருப்பதால் அந்த பகுதியில் ஆள் நடமாட்டம் அதிகம் இல்லாமல் இருந்தது.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மர்மநபர் ஒருவர் அந்த முதியவரின் தலைமீது கல்லை போட்டு கொலை செய்துவிட்டு, அவரிடம் இருந்து பணத்தையும், அவர் கட்டியிருந்த கை கடிகாரத்தையும் திருடி சென்றார்.இதேபோன்று நேற்றுமுன்தினம் அதிகாலை சேலம் காசக்காரனூர் பகுதியில் டயர் விற்பனை நிலையம் முன்பு உறங்கிக் கொண்டிருந்த வடநாட்டை சேர்ந்த அடையாளம் தெரியாத நபரின் தலைமீதும் வாலிபர் ஒருவர் கல்லை போட்டு கொலை செய்துவிட்டு அவரிடம் இருந்த பணத்தை திருடி சென்றுள்ளார்.
3 நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் முதியவர் ஒருவர் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் இறந்து கிடந்தார் இதுவும் சைக்கோ கொளையாளியின் கைவரிசையாக இருக்கலாம் என சந்தேகம் எழுந்துள்ளது. கீழே கிடந்த கல்லை கொண்டு அடித்து தான் இந்த 3 கொலைகளும் நடந்திருக்கின்றன. இப்படி தொடர்ந்து நடந்து வரும் கொலைகளும் கொலை செய்யப்பட்ட விதமும் ஒரு மாதிரியாக இருப்பதால் யாரோ ஒருவர் தான் இந்த 3 கொலைகளையும் செய்திருக்க வேண்டும் என்ற சந்தேகத்தின் அடிப்படையில் காவல்துறை உதவி ஆணையர் ஈஸ்வரன், நகர காவல் ஆய்வாளர் குமார் மற்றும் காவலர்கள் சம்பவ இடம் விரைந்து சென்று அங்கிருக்கும் சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் கொலை சம்பவத்தின்போது சிசிடிவி காமிராவில் பதிவான காட்சிகளை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும் மாநகரில் உள்ள அனைத்து கடைகள், வணிக வளாகங்கள், மதுபான கடைகளில் கொலையாளியின் புகைப்படம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களாக 20க்கும் மேற்பட்டவர்களிடம் இந்த கொலை தொடர்பாக காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். நேற்று காலை சாலையில் சுற்றிதிரிந்து வந்த 8 பேரை பிடித்தும் காவல்துறையினர் விசாரணை செய்துள்ளனர். அவர்களில் 2 பேர் மனநலம் பாதிக்கப்பட்டும், கொலையாளியின் உருவ ஒற்றுமையையும் கொண்டுள்ளதால் அவர்களின் பின்புலத்தை போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.