காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்கக் கோரிய மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த நிலையில், அங்கு இயல்பு நிலை திரும்ப 3 மாதங்கள் ஆகும் என மத்திய அரசு பதிலளித்துள்ளது.
காஷ்மீருக்கு வழங்கப்பட்டிருந்து சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதையடுத்து, பதற்றமான சூழலை தவிர்க்க, பலத்த பாதுகாப்பு போடப்பட்டு, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்பு காரணங்களுக்காக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, தொலைதொடர்பு சேவைகள் துண்டிக்கப்பட்ட நிலையில், கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இந்நிலையில், அங்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளை நீக்கக்கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அருண் மிஸ்ரா, எம்.ஆர்.ஷா, அஜய் ரஸ்தோகி ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, ஜம்மு காஷ்மீரில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் எப்போது தளர்த்தப்படும் என, மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
இதற்கு பதிலளித்த மத்திய அரசு, ஜம்மு காஷ்மீரில் இயல்புநிலை திரும்ப படிப்படியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், அங்கு இயல்புநிலை திரும்ப 3 மாதங்கள் ஆகும் என்றும் தெரிவித்தது. இதையடுத்து, 2016ம் ஆண்டு 47 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டபோது, இயல்புநிலை திரும்ப 3 மாதங்கள் ஆனதை சுட்டிக்காட்டிய உச்சநீதிமன்றம், ஓரே இரவில் அனைத்தையும் மாற்ற முடியாது என்பதால், மத்திய அரசு சிறிது காலம் எடுத்துக்கொள்வதில் தவறு இல்லை என்று தெரிவித்தது. அதே நேரத்தில், சட்டம் ஒழுங்கு பாதிக்காதவாறு பார்த்துக்கொள்ளுமாறும் மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.