திருச்சியில் சட்ட விரோதமாக இரண்டு ஆண் குழந்தைகளை விற்பனை செய்த 6 பெண்கள் உட்பட 8 பேரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவெறும்பூரைச் சேர்ந்த தம்பதி, சட்டவிரோதமாக ஆண் குழந்தை ஒன்றை வளர்த்து வந்துள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரை அடுத்து, மாவட்ட குழந்தைகள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல்துறையினர், அவர்களது வீட்டுக்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர்கள் முன்னுக்குப் பின் முரணாகப் பதிலளித்ததால், அவர்களை அதிகாரிகள் கைது செய்தனர். இந்த வழக்கில், திருச்சி அரசு மருத்துமனையில் தற்காலிகமாக பணியாற்றி வந்த இரு பெண்கள் மற்றும் 82 ஆயிரம் ரூபாய்க்கு குழந்தையை விற்பனை செய்த பெண்ணையும் காவல்துறையினர் கைது செய்தனர்.
இதேபோல், திருவெறும்பூர் பனையக்குறிச்சியை சேர்ந்த தர்மராஜ்-ராணி தம்பதி, தங்களது 4வது குழந்தையை சட்ட விரோதமாக தங்களது உறவினர்களிடம் கொடுத்துள்ளனர்.
மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற ராணி தனது பெயர் மற்றும் முகவரியை போலியாக கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது. இதனடிப்படையில், தர்மராஜ்-ராணி தம்பதியினரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்த இரு வழக்குகளிலும் தொடர்புடைய 6 பெண்கள் உட்பட 8 பேரை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர், தலைமறைவாக உள்ள கோவிந்தன் என்பவரை தேடி வருகின்றனர்.