தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வரும் எழும்பூர் தாய் சேய் நல மருத்துவமனையில், குழந்தைகளுக்குத் தவறான சிகிச்சை அளிக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இதுகுறித்து இந்த செய்தித் தொகுப்பில் விரிவாகப் பார்க்கலாம்..
நூறாண்டுகளுக்கும் மேலாக செயல்படும் சென்னை எழும்பூர் அரசு தாய் சேய் நல மருத்துவமனையில் சென்னை மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் வந்து சிகிச்சை பெற்றுச் செல்கின்றனர்.
இந்நிலையில் விடியா ஆட்சி பொறுப்பேற்ற பிறகு எழும்பூர் மருத்துவமனை, அதன் சிறப்பை இழந்து வருகிறது என்ற குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த அஜிசா என்ற பெண் தனது ஒன்றரை வயது குழந்தையை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதித்தார்.
அங்கு குழந்தைக்கு அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால் அவரது கை அகற்றப்பட்டது. இதையடுத்து குழந்தை எழும்பூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டது. அங்கும் அந்த குழந்தைக்கு முறையான சிகிச்சை அளிக்காமல் உயிரிழந்தது.
அடுத்ததாக, எழும்பூர் மருத்துவமனை மருத்துவர்களின் தவறான சிகிச்சையால் தனது 10 வயது மகளின் கால் அகற்றப்பட்டுள்ளதாக தலைமைக் காவலர் ஒருபுறம் போராட்டம் நடத்தி வருகிறார்.
இதுமட்டுமல்லாமல் எழும்பூர் மருத்துவமனையில் தங்களுக்கு உரிய மரியாதை அளிக்கப்படுவதில்லை, மருத்துவர்களும், செவிலியர்களும் தங்களைத் தரக்குறைவாக பேசுகின்றனர் என்று ஒப்பந்தப் பணியாளர்கள் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விடியா ஆட்சி அமைத்த நாள் முதல் எழும்பூர் மருத்துவமனை நிர்வாகத்தில் இத்தனை குளறுபடிகள் நடப்பதாகவும், சுகாதாரத்துறை அமைச்சரோ இதுகுறித்து கண்டுகொள்ளாமல் மாரத்தான் ஓடுவதிலேயே பிஸியாக இருப்பதாக பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் வேதனை தெரிவிக்கின்றனர்.
Discussion about this post