இலங்கை இறுதி யுத்தத்தின்போது திமுக செயல்பட்ட விதம் தொடர்பாக இன்றளவும் ஈழத் தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமும் கசப்புணர்வும் இருப்பதாக வடக்கு மாகாண முன்னாள் முதல்வர் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
கடந்த 2009 ம் ஆண்டு ராஜபக்சே தலைமையிலான இலங்கை அரசாங்கத்துக்கும், விடுதலைப் புலிகளுக்கும் இடையே நடைபெற்ற இறுதிக்கட்ட போரின்போது லட்சக்கணக்கான அப்பாவி தமிழர்கள் இலங்கை அரசால் கொன்று குவிக்கப்பட்டனர். அப்போது, தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியும், மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியும் நடைபெற்று வந்தது. இறுதிக்கட்டப் போரை தடுக்க கருணாநிதியோ, மத்தியில் ஆண்ட காங்கிரஸ் கட்சியோ எதுவும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இன்றளவும் தமிழர்கள் மனதில் நிலவி வருகிறது.
இதை மீண்டும் ஒருமுறை நிரூபிக்கும் வகையில், இலங்கை வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கட்சியின் நிறுவனருமான விக்னேஸ்வரன் ஸ்டாலினுக்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கோடிட்டுக் காண்பித்துள்ளார். இலங்கையில் இறுதி யுத்தம் நடைபெற்ற காலகட்டத்தில், தமிழ் மக்கள் இனப்படுகொலைக்கு உள்ளாக்கப்பட்ட போது, திராவிட முன்னேற்றக் கழகம் செயல்பட்ட விதம் தொடர்பாக இன்றளவும் இலங்கை தமிழர்கள் மத்தியில் ஏமாற்றமும், கசப்புணர்வும் இருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.