5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் கல்வி உதவித் தொகை வழங்க உள்ளதாக மத்திய சிறுபான்மை நலத்துறை அமைச்சர் முக்தர் அப்பாஸ் நக்வி தெரிவித்துள்ளார்.
தில்லியில் நடைபெற்ற மெளலானா அபுல் கலாம் ஆசாத் அறக்கட்டளையின் கூட்டத்தில் பங்கேற்ற பின், செய்தியாளர்களைச் சந்தித்த அவர், நாடு முழுவதும் உள்ள மதரசாக்களில் ஹிந்தி, ஆங்கிலம், கணிதம் உள்ளிட்ட பாடங்களும் கற்றுத் தரப்படும் என்றும், அதன்மூலம் மதரசாவில் கல்வி பயிலும் மாணவர்கள் பொது வெளியில் செயல்பட முடியும் என்றும் குறிப்பிட்டார். சிறுபான்மையினர் கல்வி, பொருளாதாரம், அதிகாரம் அளித்தல் ஆகியவற்றிற்காக கல்வி, வேலைவாய்ப்பு பெறுவது உறுதி செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.
இதற்காக அடுத்த 5 ஆண்டுகளில் 5 கோடி சிறுபான்மை மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்படும் என்றும் கூறினார். பள்ளிகள் இல்லாத பகுதிகளில் போர்க்கால அடிப்படையில் பள்ளிகள் கல்லூரிகள் கட்டமைக்கப்படும் என்ற அவர், சிறுபான்மை பெண் குழந்தைகளின் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் விழிப்புணர்வு பிரசாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறினார்.