தமிழக அரசின் கல்வித் தொலைக்காட்சி வரும் திங்கட் கிழமை முதல் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த நிகழ்ச்சிகளுடன் தனது ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது.
தமிழக அரசு கல்வித்துறையில் பல்வேறு வளர்ச்சிக்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாணவர்களின் அறிவை வளர்க்கும் வகையில் கல்வி, அறிவியல், வேலைவாய்ப்பு, விளையாட்டு உள்ளிட்ட பல்வேறு வகையான நிகழ்ச்சிகளுடன் கல்வித் தொலைக்காட்சி வரும் 26ஆம் தேதி தொடங்க உள்ளது. இதனைத் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தொடங்கி வைக்க உள்ளார்.
சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலக வளாகத்தில் நவீன வகை கேமராக்கள், படப்பிடிப்புக் கருவிகள், ஆளில்லா விமானம் ஆகியவற்றுடன் அமைக்கப்பட்டு, கடந்த மே 29ஆம் தேதி முதல் கல்வித் தொலைக்காட்சியின் சோதனை ஓட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காகத் தமிழக அரசு ஒரு கோடியே 3 லட்சம் ரூபாய் ஒதுக்கியுள்ளது.
இந்நிலையில் ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த, 32 வகையான நிகழ்ச்சிகளுடன், முழுநேர ஒளிபரப்பைத் தொடங்க உள்ளது. 24 மணி நேரமும் கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள், ஒளிபரப்பப்பட உள்ள இத்தொலைக்காட்சியை, அரசு கேபிளில் 200ஆவது சேனலாகக் காணலாம்.
வணிக நோக்கில் செயல்படும் தனியார் தொலைக்காட்சிகளுக்கு மத்தியில், அனைத்து வயது மாணவர்களும் பரந்த அறிவைப் பெறும் வகையில், நீட் தேர்வு போன்ற அனைத்து வகையான போட்டித் தேர்வுகளையும் மாணவர்கள் எதிர்கொள்வதற்கான பயிற்சிகளும் இத்தொலைக்காட்சி மூலம் வழங்கப்பட உள்ளன.
மாணவர்கள் பள்ளியில் உள்ள நேரங்களில், பள்ளிகளில் நடைபெற்ற போட்டிகள், திறன் வளர்ப்பு குறித்த பயிற்சிகள், பெற்றோர்களுக்கு ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சிகள் போன்றவைகளும் இத்தொலைக்காட்சி நிகழ்ச்சிகளாக இடம்பெற உள்ளன.
பாடப்புத்தகம் மட்டும் அல்லாமல், காணொலி மூலமாகவும் பல்வேறு வகையான கல்வி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ள, இத்தொலைக்காட்சி மூலம் மாணவர்கள் வீட்டில் இருந்த படியே தங்களுடைய அறிவுத்திறனை விரிவுபடுத்திக் கொண்டு, வாழ்வில் முன்னேற்றம் காணலாம் …