இடைநின்ற மாணவர்களுக்கு ஓவியங்கள் மூலம் கல்வி

தர்மபுரி அருகே, இடைநின்ற மாணவர்களுக்கு ஓவியங்கள் மூலம் கல்வி கற்றுத்தரப்படுகிறது. தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகள் மாறி வரும் நிலையில், இது குறித்த செய்தித்தொகுப்பை இப்போது காணலாம்…

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி அரசு மேல்நிலை பள்ளி வளாகத்திலேயே, உண்டு உறைவிடப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதை சற்றே நெருங்கி பார்த்தால், ஒரு ரயில் பெட்டி தான் நமக்கு தெரிகிறது. உண்மையில் அது ரயில் பெட்டி அல்ல…அது ஒரு ஓவியம்… உண்டு உறைவிடப்பள்ளியில் இது போன்ற ஓவியங்கள் வழியாக கல்வி கற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் கல்வித் திறனை மேம்படுத்தவும், கல்வியின் அவசியம் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், பள்ளி சுவர்களில் வித்தியாசமான ஓவியங்கள் வரைந்து புதிய முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இங்கு படிக்கும் மாணவர்கள் அனைவரும், ஏதோ ஒருவகையில் பள்ளியில் இருந்து இடை நின்றவர்கள். இவர்கள் கல்வி கற்பதை சிரமமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில், சீடு என்ற தொண்டு அமைப்புடன் இணைந்து அரசு இந்த முயற்சியில் இறங்கியுள்ளது.

கோடை விடுமுறைக்குப் பிறகு பள்ளிக்கு வரும் குழந்தைகளுக்கு, இந்த ரயில் பெட்டிகள் புதிய ஆச்சரியத்தை ஏற்படுத்த காத்திருக்கின்றன. தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசு பள்ளிகளிலும் கல்வி தர முயலும் அரசின் முயற்சிக்கு, கல்வியாளர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Exit mobile version