அடுத்த பட வாய்ப்பு வருவதற்கு முன்பே முதலமைச்சராக ஆக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி ஒரு ரியல் தலைவர் என்பதை வரலாறு உணர்த்தி வருவதாக நடிகர் ரஜினிகாந்துக்கு ‘நமது அம்மா’ நாளேடு பதிலடி கொடுத்துள்ளது.
இது தொடர்பாக ‘நமது அம்மா’ நாளேட்டில் ஆச்சரியம், பூச்சொரியும் எடப்பாடியாரும்… சூசக ஆருடம் சொன்ன சூப்பர் ஸ்டாரும் என்ற தலைப்பில் கட்டுரை வெளியாகி உள்ளது. அதில், வினா குறிகளை, வியப்பு குறிகளாக மாற்றி, கேள்விகளையும், கேலிகளையும் ஆச்சரியங்களாக்கி எடப்பாடி பழனிசாமி நடத்துகிற நல்லாட்சி 2021-லும் தொடரும் என்பதை தான், நாளைக்கும் நடக்கப் போகிற அதிசயம் என்பதாக சூசக ஜோதிடத்தை சூப்பர் ஸ்டார் சொல்லி இருக்கிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் பதவி என்பது தான் எடுக்கும் சினிமாக்களில் முதல் சீனில் ஆசைப்பட்டு மூன்றாவது காட்சியிலேயே கைக்கு எட்டி விடுகிற கற்பனை நாற்காலிகள் அல்ல என்பதை கமல்ஹாசனுக்கு, ரஜினி சுட்டி காட்டியிருக்கும் மறைமுக அறிவுரையாக தோன்றுவதாக ‘நமது அம்மா’ நாளேடு குறிப்பிட்டுள்ளது.
கண்டக்டராக வாழ்க்கையை தொடங்கிய ரஜினி கன்னித்தமிழ் பூமியின் ‘சூப்பர் ஸ்டாராவோம்’ என்று கனவிலும் கூட நினைத்திருக்க மாட்டார் என்று ‘நமது அம்மா’ நாளேடு தெரிவித்துள்ளது.
காலம் கொடுக்கும் வாய்ப்பை கண்ணியம் குன்றாத கடுமையான உழைப்பால் தமதாக்கிக் கொள்பவர்கள்தான் தலைவர்கள், அறிஞர்களாக தடம் பதித்து உலக சரித்திரத்தில் இடம் பிடிக்கிறார்கள்.
அப்படித்தான் எடப்பாடி பழனிசாமியும், உழைத்து தான் கொண்ட இயக்கத்தின் மீது குன்றாத விசுவாசத்தை பதித்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக, நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக அதன் பிறகு இன்று தமிழகத்தின் முதலமைச்சராக உயர்ந்து ஒரு தொண்டனாலும், தலைவனாக முடியும், தமிழ் உலகை ஆளுகிற முதலமைச்சராக முடியும் என்பதை நிரூபித்து இருப்பதாக ‘நமது அம்மா’ நாளேடு தெரிவித்துள்ளது.
ஒரு படத்தில் நடித்து விட்டு மறு பட வாய்ப்பு வருவதற்கு முன்பே முதலமைச்சராக ஆசைப்படும் ரீல் தலைவர்களுக்கு மத்தியில், எடப்பாடி பழனிசாமி ஒரு ரியல் தலைவர் என்பதை வரலாறு உணர்த்தும் என்று ‘நமது அம்மா’ நாளேடு தெரிவித்துள்ளது.