எளிமையானவர்; பழகுவதற்கு இனிமையானவர் – விவேக் குறித்து முதலமைச்சர் பழனிசாமி!

திரைப்பட நடிகர் விவேக் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார்.

 

முதலமைச்சர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், தமிழ் திரையுலகினரும், திரைப்பட ரசிகர்களும் சின்ன கலைவாணர் என அழைக்கப்பட்ட நடிகர் விவேக் உயிரிழந்த செய்தியை அறிந்து தான் மிகுந்த வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார். நடிகர் விவேக் தலைமை செயலகத்தில் பணியாற்றிய பின்னர், திரைத்துறையில் நாட்டம் கொண்டு 30 ஆண்டுகளாக சிறந்த நடிகராக தனது ஆளுமையை கோலோச்சியவர் என தெரிவித்துள்ளார்.

சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மரம் வளர்ப்பு, பிளாஸ்டிக் தடை மற்றும் கொரோனா பற்றிய விழிப்புணர்வு பணிகளில் அரசுக்கு உறுதுணையாக இருந்த நடிகர் விவேக், மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் கனவை நிறைவேற்றும் வகையில் “கீரின் கலாம்” என்ற அமைப்பின் மூலம் ஒரு கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காக கொண்டு அதனை தீவிரமாக செயல்படுத்தி வந்தவர் என குறிப்பிட்டுள்ளார்.

மிகவும் எளிமையானவராகவும், பழகுவதற்கு இனிமையானவருமான நடிகர் விவேக், மத்திய அரசால் வழங்கப்படும் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மஸ்ரீ விருது, தமிழக அரசால் வழங்கப்படும் கலைவாணர் விருது உள்ளிட்ட எண்ணற்ற விருதுகளை பெற்றவர் என தெரிவித்துள்ளார். அவருடைய நடிப்பு மற்றும் சமூக சேவை என்றென்றும் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்திருக்கும் என்றும், அவரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து கொள்வதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார். 

Exit mobile version