கொரோனா வைரஸ் தடுப்பு பணிக்காக முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பொதுமக்கள் நிதியுதவி அளிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்கள் நலன் ஒன்றையே குறிக்கோளாக கொண்டு செயல்படும் தமிழக அரசு ஒவ்வொரு குடும்பத்தையும் பாதுகாக்கும் வகையில் நிதியுதவி, அத்தியாவசிய பொருட்களை விலையில்லாமல் வழங்கியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார். கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்காக அரசின் கோரிக்கையை ஏற்று பலர் தங்கள் பங்களிப்பினை முதலமைச்சர் நிவாரண நிதிக்கு வழங்கி வருவதாகவும் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் நோய்த்தடுப்பு நடவடிக்கையை வருங்காலத்தில் தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாகவும், இந்த நடவடிக்கையை சிறப்பாக மேற்கொள்ள தொழிலதிபர்கள், முன்னணி தனியார் நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் தமிழக மக்களின் பங்களிப்பை அரசு நாடுவதாகவும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைக்காக முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு இதுவரை 79 கோடியே 74 லட்சத்து 61 ஆயிரம் ரூபாய் கிடைத்துள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. கடந்த 3 முதல் 6ம் தேதி வரை நான்கு நாட்களில் மட்டும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு பல்வேறு தரப்பினரிடம் இருந்து 17 கோடியே 44 லட்சத்து 41 ஆயிரத்து 886 ரூபாய் பெறப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.