நடப்பாண்டு தமிழ்நாட்டு மாணவர்கள் நீட் தேர்வில் பங்கேற்பதா வேண்டாமா என்பதை அரசு தெளிவுப்படுத்த வேண்டுமென எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
எதிகட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆட்சிக்கு வந்த பிறகு நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என தேர்தல் அறிக்கையில் திமுக அறிவித்திருப்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
நீட் தேர்வு வேண்டாம் என்பதே அதிமுகவின் நிலைபாடு எனக் குறிப்பிட்டுள்ள அவர், இதற்காக அதிமுக அரசு உச்சநீதிமன்றம் வரை சென்று சட்டப் போராட்டம் நடத்தி விலக்கு பெற்றதையும் நினைவு கூர்ந்துள்ளார்.
அதிமுக ஆட்சியின்போது அரசுப் பள்ளி மாணவர்களின் நலன் கருதி, சிறப்பு பயிற்சி அளிக்கப்பட்டதாகவும், நீட் தேர்வு குறித்த புரிதலுக்காக சிறப்பு கையேடும் தயாரிக்கப்பட்டு மாணவர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும், 7 புள்ளி 5 சதவீத உள் ஒதுக்கீடு மூலம், 435 மாணவர்களின் மருத்துவ கனவை அதிமுக அரசு நிறைவேற்றியதோடு கல்விச் செலவை அரசே ஏற்றதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.
நீட் தேர்வு தமிழகத்தில் நடைபெறுமா? நடைபெறாதா? என்ற குழப்பம் மாணவர்கள் மத்தியிலும், பெற்றோர்கள் மத்தியிலும் எழுந்துள்ளதை சுட்டிக்காட்டியுள்ள அவர், மாணவர்கள் தேர்வுக்கு தயாராக வேண்டுமா? வேண்டாமா? என்று புரியாமல் தவித்து வருவதாக கூறியுள்ளார்.
சட்டப்பேரவையில் இது குறித்து தாம் கேள்வி எழுப்பிய போது, முதலமைச்சர் இதற்கு நேரடியாக பதிலளிக்கவில்லை என்றும் அவர் குறைகூறியுள்ளார்.
அரசு நியமித்துள்ள கமிஷன் பரிந்துரைகள் வருவதற்கு முன்பு, இந்தாண்டு நீட் தேர்வு நடைபெறுமா? என்பதை தமிழ்நாடு அரசு தெளிவுப்படுத்த வேண்டும் என்று எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.