கூட்டுக்குடிநீர் திட்டத்தில் மின்மோட்டார் இயக்கும் நேரம் குறைக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டியுள்ளார்.
சட்டப்பேரவையில் பேசிய அவர், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினர் பிச்சாண்டி, பத்து ஆண்டுகளாக கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தில்லை என குற்றம்சாட்டியது தவறானது என தெரிவித்தார்.
அதிமுக ஆட்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட கூட்டுக் குடிநீர் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டது குறித்து கொள்கை விளக்க குறிப்பில் இடம்பெற்றுள்ளதாக விளக்கினார்.
மேச்சேரி – நங்கவள்ளி கூட்டுக் குடிநீர் திட்டம், நாசிபுரம் கூட்டுக் குடிநீர் திட்டம், இருப்பாளி கூட்டுக் குடிநீர் திட்டங்கள், அதிமுக ஆட்சியில் 14 மணி நேரம் இயங்கி வந்ததாக கூறிய அவர்,
தற்போது மின்மோட்டார் இயங்கும் நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்பட்டுள்ளதால் அப்பகுதிகளில் செயற்கையான குடிநீர் பிரச்னை ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இப்பிரச்னையில் அரசு உடனடியாக தலையிட்டு அதிமுக ஆட்சியில் இருந்தது போல் மின்மோட்டார் தொடர்ந்து இயங்குவதை உறுதிபடுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.