புதுக்கோட்டையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சூறாவளி பிரசாரம்!

அதிமுக அரசு ஏற்கனவே நிறைவேற்றிய திட்டங்களை, தேர்தல் வாக்குறுதிகளாக திமுக வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை தொகுதியில் அதிமுக வேட்பாளரும், அமைச்சருமான சி.விஜயபாஸ்கரை ஆதரித்து முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.

அலைகடலென கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், தமிழக மக்கள் பயனடையும் வகையில் அதிமுக அரசு செயல்படுத்தி திட்டங்களை குறித்து பட்டியலிட்டார்.

மருத்துவ படிப்புகளில் 7 புள்ளி 5 சதவீத உள்ஒதுக்கீடு மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவர் கனவை நனவாக்கியது குறித்து முதலமைச்சர் பெருமிதம் தெரிவித்தார்.

விவசாய பெருமக்களின் கஷ்டங்களை போக்கும் நோக்கில் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை குறிப்பிட்டார்.

இது தெரியாமல், திமுக தேர்தல் அறிக்கையில் பயிர்க்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்ற அறிவிப்பை ஸ்டாலின் வெளியிட்டுள்ளதாக முதலமைச்சர் விமர்சித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், கடந்த 10 ஆண்டுகளில் அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் செயல்படுத்திய திட்டங்கள் குறித்து குறிப்பிட்டார்.

மேலும் வரவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலுக்கான அதிமுக தேர்தல் அறிக்கையில் உள்ள வாக்குறுதிகள் குறித்து பொதுமக்களிடம் விளக்கி கூறினார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், பொதுமக்கள் அனைவரும் கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொண்டார்.

விராலிமலை தொகுதிக்குட்பட்ட இலுப்பூர் பகுதியில் முதலமைச்சர் வாக்கு சேகரித்தார்.

அப்போது பேசிய அவர், சிறுபான்மையின மக்களுக்காக அதிமுக அரசு செயல்படுத்திய நலத்திட்டங்களை பட்டியலிட்டார்.

ஹஜ் மற்றும் ஜெருசேலம் புனித பயணங்கள் மேற்கொள்ள அரசு வழங்கும் மானியத்தை உயர்த்தியதை குறிப்பிட்டார்.

தமிழ்நாட்டில் ஏழ்மையை போக்கும் நோக்கில் அனைவருக்கும் வீடுகள் கட்டித் தரப்படும் என்றும் முதலமைச்சர் உறுதியளித்தார்.

பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வர துடிக்கும் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும், ஸ்டாலின் ஹீரோ இல்லை ஜீரோ என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார்.

புதுக்கோட்டை தொகுதி அதிமுக வேட்பாளர் கார்த்திக் தொண்டைமானை ஆதரித்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.

அதிமுக ஆட்சியை கவிழ்க்க ஸ்டாலின் மேற்கொண்ட அராஜகங்களை பட்டியலிட்டார்.

சட்டப்பேரவையிலும் அராஜகத்தில் ஈடுபட்ட திமுக, ஆட்சிக்கு வந்தால் நாடு தாங்குமா? என்று முதலமைச்சர் கேள்வி எழுப்பினார்.

ஆளுங்கட்சியாக இருந்த போதும், எதிர்கட்சியாக இருந்தபோதும் மக்களை தேடி செல்லாத ஸ்டாலின், தேர்தல் நெருங்கியவுடன் மக்களை நோக்கி செல்வதாக முதலமைச்சர் விமர்சித்தார்.

திருமயம் தொகுதி அதிமுக வேட்பாளர் வைரமுத்துவை ஆதரித்து திருமயத்தில் முதலமைச்சர் பிரசாரம் மேற்கொண்டார்.

திரளாக கூடியிருந்த பொதுமக்கள் மத்தியில் பேசிய அவர், ஸ்டாலின் தன்னை ஹீரோவா நினைத்து கொண்டிருப்பதாகவும், மக்கள் முன்னிலையில் அவர் ஜீரோ என்றும் முதலமைச்சர் விமர்சித்தார்.

பொய் வாக்குறுதிகள் கொடுத்து ஆட்சிக்கு வர துடிக்கும் ஸ்டாலினின் பகல் கனவு பலிக்காது என்றும் தெரிவித்தார்.

 

 

Exit mobile version