கொங்கு மண்டலம் என்றைக்கும் அதிமுகவின் கோட்டை, திமுகவால் ஒருபோதும் வெற்றி பெற முடியாது என முதலமைச்சர் கூறியுள்ளார்.
கோபிசெட்டிப்பாளையம் தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் செங்கோட்டையன், பவானி தொகுதி அதிமுக வேட்பாளர் அமைச்சர் கருப்பணன், ஈரோடு மேற்கு தொகுதி அதிமுக வேட்பாளர் கே.வி.ராமலிங்கம், பெருந்துறை தொகுதி அதிமுக வேட்பாளர் ஜெயக்குமார், அந்தியூர் தொகுதி அதிமுக வேட்பாளர் கே.எஸ்.சண்முகவேல், பவானிசாகர் தொகுதி அதிமுக வேட்பாளர் பண்ணாரி, ஈரோடு கிழக்கு தொகுதி தமாகா வேட்பாளர் யுவராஜ், மொடக்குறிச்சி தொகுதி பாஜக வேட்பாளர் சி.கே.சரஸ்வதி ஆகியோரை ஆதரித்து பெருந்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் மேற்கொண்டார்.
அப்போது பேசிய முதலமைச்சர், கொங்கு மண்டலம் என்றைக்கும் அதிமுகவின் கோட்டை, திமுகவால் ஒருபோதும் இங்கு வெற்றி பெறவே முடியாது என்றார்.சட்டமியற்றும் மாமன்றத்திலேயே அராஜகத்தில் ஈடுபடும் ஒரே கட்சி திமுகதான் என முதலமைச்சர் குற்றம்சாட்டினார். ரவுடிகளை வைத்திருக்கும் திமுக ஆட்சிக்கு வந்துவிடக்கூடாது, இரட்டை இலைக்கே மக்கள் வாக்களிக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
மறைந்த முதலமைச்சர் புரட்சித்தலைவி ஜெயலலிதா வாக்குறுதி அளித்தது போலவே, அத்திக்கடவு- அவினாசி திட்டத்திற்கு நிதி ஒதுக்கி பணிகளை தொடங்கியுள்ளதாக கூறிய முதலமைச்சர், தேர்தலில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சி அமைத்த பின்னர் திட்டத்தை நிறைவேற்றி, நேரில் வந்து தொடங்கிவைப்பேன் என்றும் உறுதியளித்தார்.