அமைச்சர் பொன்முடி திமுக ஆட்சிக் கட்டிலில் ஏறும்போதெல்லாம் நாவடக்கத்தைப் பேணாமல் வம்படியாக பேசி பொதுமக்களிடம் நன்றாக வாங்கிக்கட்டிக் கொள்வார். அதுமட்டுமல்லாமல் கூடுதலாக ஊழலிலும் ஈடுபடுவார். அப்படிப்பட்ட ஒரு ஊழல்தான் தற்போது அம்பலப்பட்டுப் போய் இருக்கிறது. திமுகவின் ஆட்சிகாலத்தில் அதாவது, 2006 முதல் 2011 வரையிலான காலக்கட்டத்தில் கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி மற்றும் அவரது மகன் கவுதம் சிகாமணி ஆகியோர் மீது அளவுக்கு மீறி மண் எடுத்ததாக புகார் எழுந்த நிலையில், அன்றைக்கு வழக்குத் தொடரப்பட்டது. தற்போது அந்த வழக்கினை தடை செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்று அளிக்கப்பட்டிருந்தது. இந்த வழக்கினை தடை செய்யமுடியாது என்று தற்போது உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.
அளவுக்கு மீறி செம்மண் எடுத்ததாக சொல்லப்பட்ட இந்த வழக்கில் அன்றைய விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் செம்மண் அள்ளுவதற்கான டெண்டரினை பொன்முடிக்கு சொந்தமான பட்டா நிலத்தில் எடுத்துக்கொள்ள உத்தரவிட்டார். பின்னர், பொன்முடிக்கு நெருக்கமான ஜெயச்சந்திரன், ராஜமகேந்திரன் ஆகிய இருவருக்கும் அனுமதி வழங்கப்பட்டது. விதிகளை மீறி மணலை எடுக்கப்பட்டதாகவும், அளவுக்குமீறி மணலை அள்ளுவதாகவும் இவர்கள்மீது குற்றச்சாட்டு விதிக்கப்பட்டது. இவர்களால் 28.37 கோடி ரூபாய் அரசுக்கு வரி இழப்பீடானது ஏற்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இவர்கள் இருவருக்கும் எதிராக குற்றப்பிரிவு போலிசார் அதிமுக ஆட்சியில் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
குவாரி உரிமம் வழங்க உடந்தையாக இருந்ததாக, அமைச்சர் பொன்முடிக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டம் மற்றும் ஊழல் தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கில் விழுப்புரம் நீதிமன்றத்தில் வழக்குப்பதிவு செய்து குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி பொன்முடி தாக்கல் செய்த மனுவை விழுப்புரம் நீதிமன்றம் மற்றும் சென்னை உயர்நீதிமன்றம் நிராகரித்துவிட்டது.
தற்போது இந்த வழக்கை ரத்துசெய்யக் கோரியும், இந்த வழக்கிற்கு தடை விதிக்கக்கோரியும் பொன்முடியின் மகன் கவுதம் சிகாமணி மனுத்தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி ஜி.சந்திரசேகரன் விசாரித்து, விசாரணைக்கு தடை விதிக்க நீதிபதி மறுத்துவிட்டார்.
இதனைத் தொடர்ந்து திமுக உடன்பிறப்புகள் ஆட்டம் கண்டு போயியுள்ளனர். ஏற்கனவே செந்தில்பாலாஜியால் திமுகவின் அடிநாதமே ஆட்டம் கண்டுவிட்டது. இதில் திமுகவின் முதன்மை அமைச்சர்களில் ஒருவரான பொன்முடி இப்படி வசமாக வந்து சிக்கியிருப்பது திடீர் திருப்பத்தை திமுகவிலும் தமிழக அரசியலிலும் ஏற்படுத்துமா? என்று கேள்வியை அரசியல் விமர்சகர்கள் முன்னெடுத்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் இன்னொரு அமைச்சரின் விக்கெட்டும் க்ளோசா என்று நெட்டிசன்கள் கலாய்த்துத் தள்ளுகிறார்கள்.
Discussion about this post