பொருளாதார சீர்திருத்தம் குறித்த, முக்கிய அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
நாட்டில் நிலவும் பொருளாதார மந்த நிலை குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நிதி அமைச்சக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாக தெரிகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில், பொருளாதார மந்த நிலையை சீர் செய்வது குறித்து பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மதியம் 2 மணியளவில் செய்தியாளர்களை சந்திக்கிறார். அப்போது, பொருளாதார சீர்திருத்தங்கள் குறித்து முக்கிய முடிவுகளை வெளியிடுவார் என்று கூறப்படுகிறது. ஏற்றுமதியில் கொண்டு வரப்படும் மாற்றங்கள் குறித்தும் நிர்மலா சீதாராமன் விளக்கம் அளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்று வெளியாக உள்ள முக்கிய அறிவிப்புகள் குறித்து பிரதமர் அலுவலகத்தில் மத்திய நிதியமைச்சகம் சார்பில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.