பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 6 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் குடியரசுத்தலைவர் உரையுடன் இன்று தொடங்கியது. 2020-21ம் நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்வதற்கான நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கி, 11ம் தேதி வரையிலும், பிறகு, மார்ச் 2ம் தேதி தொடங்கி ஏப்ரல் 3ம் தேதி வரையிலும் 2 கட்டங்களாக நடக்கிறது. முதல் கட்டத்தில் பட்ஜெட் தாக்கல், 2ம் கட்டத்தில் பட்ஜெட் மீதான விவாதம், மானியக்கோரிக்கைகள் நிறைவேற்றம் என பல்வேறு அலுவல்கள் நடக்க உள்ளன. ஆண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால், நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் குடியரசுத்தலைவர் தொடங்கி வைத்து உரையாற்றினார். பின்னர் மத்திய நிதியமைச்சர் பொருளாதார ஆய்வறிக்கையை தாக்கல் செய்தார். அப்போது பேசிய அவர், பொருளாதார வளர்ச்சி 2021-ம் ஆண்டில் 6 சதவீதத்தில் இருந்து, 6.5 சதவீதமாக இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.