காணாமல் போனதாக சொல்லப்படும் சுற்றுச்சூழல் ஆர்வலர் முகிலனை தீவிரமாக தேடி வருவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி அறிக்கை தாக்கல் செய்துள்ளது.
கடந்த பிப்ரவரி 15ம் தேதி நாகர்கோவில் ரயில் மூலம் மதுரை செல்வதற்காக எழும்பூர் ரயில் நிலையம் வந்த முகிலன் அதன் பின் காணாமல் போனதாக கூறப்படுகிறது. அவரை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் நிர்மல் குமார் அடங்கிய அமர்வு முன்பு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, சிபிசிஐடி தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்,முகிலனை கண்டுபிடிக்க தமிழகம் முழுவதும் 57 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தேடி வருவதாகவும் பல்வேறு தரப்பிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிக்கையை பதிவு செய்த நீதிபதிகள், அடுத்த கட்ட அறிக்கை தாக்கல் செய்யும் வகையில் விசாரணையை ஏப்ரல் 8ஆம் தேதிக்கு தள்ளி வைத்ததுடன், முகிலனின் செல்போன் சிக்னல்கள் மூலம் அவர் சென்ற இடங்களை விசாரிக்கவும் உத்தரவிட்டனர்.