திருத்தப்பட்ட குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடகிழக்கு மாநிலங்களில் போராட்டம் நடைபெற்று வரும் நிலையில், குவஹாத்தியில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த இந்தியா-ஜப்பான் இடையேயான மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இந்தியா-ஜப்பான் இடையே, வரும் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை 3 நாள் மாநாட்டுக்கு, அஸ்ஸாம் மாநிலம், குவஹாத்தியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியும், ஜப்பான் பிரதமர் ஷின்ஸோ அபேவும் சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும் திட்டமிடப்பட்டிருந்தது. இந்த மாநாட்டில் பங்கேற்பதற்காக, ஷின்ஸோ அபே, நாளை குவஹாத்தி வருவதாக இருந்த நிலையில், இந்த மாநாட்டை ஒத்திவைப்பதற்கு இந்தியாவும், ஜப்பானும் கூட்டாக முடிவு செய்துள்ளன. விரைவில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் ஏதுவான நாட்களில், இந்த மாநாடு நடத்தப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. குடியுரிமைச் சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம் உள்ளிட்ட வடகிழக்கு மாநிலங்களில் போராட்டங்கள் நடைபெற்று வரும் நிலையில், மாநாடு ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.