தமிழகத்தில் தேர்தல் ஏற்பாடுகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் தேர்தல் ஆணையர்கள் சென்னையில் ஆலோசனை நடத்தினர்.
மக்களவை தேர்தலையொட்டி, தேர்தல் பணிகளில் தேர்தல் ஆணையம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது, இந்த நிலையில், தமிழகத்தில் தேர்தல் முன்னேற்பாடுகளை ஆய்வு செய்வதற்காக, தேர்தல் ஆணையர்கள் அசோக் லவசா, சுஷில் சந்திரா, தேர்தல் ஆணைய நிர்வாக இயக்குனர்கள் திலீப் சர்மா, திரேந்திர ஓஜா ஆகியோர் சென்னை வந்துள்ளனர்.
இந்த நிலையில், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தேர்தல் ஆணையர்கள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். கிண்டியில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் துணை தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
அங்கீகரிக்கப்பட்ட 7 தேசிய கட்சிகள் மற்றும் 3 மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் இதில் பங்கேற்றனர். பணப் பட்டுவாடாவை தடுக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையர்களிடம் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் வலியுறுத்தினர். அதிமுக சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், எம்.எல்.ஏ. ஜேசிடி பிராபகர், வழக்கறிஞர் அணியை சேர்ந்த பாபு முருகவேல் ஆகியோர் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.