மேட்டூர் அணையிலிருந்து கிழக்கு, மேற்கு கால்வாய்ப் பாசனத்திற்காகத் தண்ணீர் திறக்கப்படுவது மேலும் 19 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளதால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையில் இருந்து ஆண்டுதோறும் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பர் 15-ஆம் தேதி வரை 137 நாட்களுக்கு 9 புள்ளி 5 டி.எம்.சி தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 45 ஆயிரம் ஏக்கர் பரப்பளவிலான நிலங்கள் பாசன வசதி பெறும். நடப்பாண்டில் 12 நாள் தாமதமாக ஆகஸ்ட் 13-ஆம் தேதி நீர் திறக்கப்பட்டது. இன்று அணையில் இருந்து நீர்திறப்பு நிறுத்தப்படும் நிலையில், நீர் திறப்பிற்கான காலத்தை நீட்டிக்க வேண்டும் என விவசாயிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். அதனை ஏற்று, ஜனவரி 15-ஆம் தேதி வரை கூடுதலாக கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக நீர் திறப்பதற்கு அரசாணை வெளியிடப்பட்டது. காலை நிலவரப்படி மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 2 ஆயிரத்து 817 கன அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் 118 புள்ளி 83அடியாகவும், நீர் இருப்பு 91 புள்ளி 61 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக 2 ஆயிரம் கன அடி நீரும், கால்வாய்ப் பாசனத்திற்கு 600 கன அடி நீரும் திறக்கப்படுகிறது.