தமிழகத்தின் 156 ஊராட்சி ஒன்றியங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்தது. வாக்குப்பெட்டிகள் பலத்த பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுசெல்லப்படுகின்றன.
தமிழகத்தின் 27 மாவட்டங்களில் 156 ஊராட்சி ஒன்றியங்களுக்கு உட்பட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இன்று முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது. காலை முதலே பொதுமக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். முதன்முறை வாக்களித்த இளைஞர்கள் முதல் முதுமையானாலும் ஜனநாயகக் கடமையாற்றத் தவறாத முதியவர்கள் வரை உள்ளாட்சித் தேர்தலில் பங்கேற்றனர். ஒருசில நிகழ்வுகளைத் தவிரப் பெரும்பாலும் வாக்குப்பதிவு அமைதியாக நடைபெற்றது. மாலை 5 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் முகவர்கள் முன்னிலையில் வாக்குப்பெட்டிகளைத் தேர்தல் அலுவலர்கள் மூடி முத்திரையிட்டனர். அதன்பின் துப்பாக்கி ஏந்திய காவலர்களின் பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகளை வாகனங்களில் ஏற்றி வாக்கு எண்ணும் மையங்களுக்குக் கொண்டுசெல்கின்றனர்.