விண்ணப்பிக்கம் அனைவருக்கும் இ-பாஸ் வழங்கும் நடைமுறை இன்று முதல் செயல்பாட்டுக்கு வருகிறது.
கொரோனா பரவலைத் தடுப்பதற்காக மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல, இ-பாஸ் முறை நடைமுறையில் இருந்து வந்தது. நெருங்கிய உறவினர்களின் திருமணம், மரணம், வெளியிடங்களுக்குச் சென்று சொந்த ஊர்களுக்குத் திரும்புதல் உள்ளிட்டவைகளுக்கு மட்டும் இ-பாஸ் வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில், இன்று முதல் ஆதார் அல்லது குடும்ப அட்டை மற்றும் தொலைபேசி எண்ணுடன் விண்ணப்பிக்கும் அனைவருக்கும் எவ்வித தாமதமும் இன்றி இ-பாஸ் வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். பொதுமக்கள் அனைவரும் பொறுப்புடன் பயன்படுத்தி, தவிர்க்க இயலாத பயணங்களுக்கு மட்டும் இ-பாஸ் விண்ணப்பிக்க வேண்டும் என முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். மேலும், நோய் பரவலை கட்டுப்படுத்த அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை கடைபிடிக்கவும், நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இதனிடையே வெளி நாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு தற்போதுள்ள இ-பாஸ் நடைமுறையே தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.