இ-சிகரெட் என்பது என்ன? தீங்குகள் யாவை?

இ-சிகரெட்டுகளுக்கு தடை விதிக்க மத்திய அமைச்சரவை இன்று முடிவு செய்துள்ளது. ஈ சிகரெட் என்பது என்ன? அதனால் ஏற்படும் தீங்குகள் யாவை?

இ-சிகரெட்டுகள் – என்பவை எலக்ட்ரானிக் சிகரெட்டுகள், இவை நெருப்பு இல்லாமல் புகையை உற்பத்தி செய்யக் கூடியவை. இ-சிகரெட்டுகள் மூலம் புகைப்பது ஆங்கிலத்தில் ‘வாப்பிங்’ என்று அழைக்கப்படுகின்றது. இ-சிகரெட்டுகள் முதலில் சிகரெட்டுக்கு மாற்றானவையாகவும், உடல் நலத்தைப் பாதிக்காதவையாகவும் கருதப்பட்டன, ஆனால் பின்வந்த ஆய்வுகள் இ-சிகரெட்டால் ஏற்படும் தீமையானது பிற புகையிலைப் பொருட்களால் ஏற்படும் பாதிப்புகளுக்கு இணையாகவோ அதிகமாகவோ உள்ளதாகக் கண்டறிந்தன.

இதனால் தமிழக அரசு தமிழகத்தில் இ-சிகரெட் உள்ளிட்ட புகையிலை மாற்றுப் பொருட்கள் தடை செய்யப்படுவதாக கடந்த 2018 ஜூனில் அறிவித்தது, அதே ஆண்டு செப்டம்பரில் இதற்கான அரசாணையும் தமிழக அரசால் வெளியிடப்பட்டது.

தமிழக அரசைப் போலவே மத்திய அரசும் இ-சிகரெட்டுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அவற்றின் ஒரு அங்கமாக, இ-சிகரெட்டுகள் உள்ளிட்ட மாற்று புகையிலைப் பொருட்களின் உற்பத்தி, விற்பனை மற்றும் இறக்குமதிக்கு தடை விதிக்குமாறு மாநில போதைப்பொருள் தடுப்புத்துறைக்கு மத்திய அரசின் போதைப்பொருள் தடுப்புத்துறை இவ்வாண்டு மார்ச் மாதம் கடிதம் எழுதியது.

கடந்த ஆகஸ்டு மாதம், அமெரிக்காவின் இல்லினாயிஸ் மாகாணத்தில் இ-சிகரெட்டால் முதல் நபர் உயிரிழந்ததாக அமெரிக்கா அறிவித்தது. நேற்று 7ஆவது நபரின் இ-சிகரெட் உயிரிழப்பு அமெரிக்காவின் கலிபோர்னியாவில் நடந்தது. உலகெங்கும் ஆயிரக் கணக்கானோர் இ-சிகரெட்டுகளால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இப்படித் தொடரும் உயிரிழப்புகள் மற்றும் உடல்நலக் கோளாறுகளால் பல்வேறு உலக நாடுகளும் இ-சிகரெட்டை தடை செய்ய ஆலோசித்து வருகின்றன.

இந்நிலையில் இன்று இந்திய அமைச்சரவை இ-சிகரெட்டுகளுக்குத் தடை விதிக்க முடிவெடுத்து உள்ளது. இதனால் இ-சிகரெட்டுகளை தயாரிப்பது, வாங்குவது, விற்பது, ஏற்றுமதி இறக்குமதி செய்வது, இடம் மாற்றுவது, இ-சிகரெட்டுகள் குறித்து விளம்பரம் செய்வது – ஆகிய அனைத்தும் தடை செய்யப்பட உள்ளன. இந்திய அரசின் இந்த முடிவு பல கோடி இந்தியர்களின் உடல் நலனை பாதுகாப்பதாக அமைந்து உள்ளது.

 

 

 

Exit mobile version