கனவு கோப்பைகளாகும் உலகக்கோப்பைகள்:
நேற்று நடைபெற்ற மகளிருக்கான டி-20 இறுதிபோட்டியில், இந்திய மகளிர் அணி 85-ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய மகளிர் அணியிடம் தோல்வியுற்றது. மகளிர் தினத்தன்று, இந்திய மகளிர் அணி கோப்பையை வென்று சாதிப்பார்கள் என எதிர்பார்ப்பில் இருந்த இந்திய ரசிகர்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இரண்டாவது முறையாக இறுதிபோட்டிக்கு முன்னேறிய இந்திய அணி, இம்முறையும் பெருத்த ஏமாற்றத்துடனயே திரும்பவேண்டியதாயிற்று. கோப்பையை வெல்லும் என்ற எதிர்பார்ப்புடன் களமிறங்கிய இந்திய அணி சறுக்குவது இது முதல்முறை அல்ல, கடந்த சிலகாலங்களில் இறுதிபோட்டியில் இந்திய அணி மிகமோசமாகவே சொதப்பியுள்ளது.
உலகக்கோப்பை போட்டிகள் அனைத்துமே கனவு கோப்பைக்கான போட்டிகளே. அதுவும், இந்தியா போன்றதொரு நாட்டில் கிரிக்கெட் ஒரு மதமாகவும், தமக்கு பிடித்த வீரர்களை கடவுளாகவும் பார்க்கும் பழக்கம் 1983-ஆம் ஆண்டிற்கான உலகக்கோப்பை இந்தியாவுக்கு சொந்தமானதிலிருந்தே இருக்கிறது. ஆஸ்திரேலியாவும், மேற்கிந்திய தீவுகள் அணியும் கோலோச்சி கொண்டிருந்த காலத்தில், இந்திய அணியாலும் கோப்பைகளை வெல்ல முடியும் என்று கபில்தேவ் & கோ நிரூபித்துக் காட்டியது. ஆனால், துரதிஷ்டவசமாக அடுத்த உலகக்கோப்பையை இந்தியா வெல்ல 28-ஆண்டுகள் தேவைப்பட்டது. தற்போது, அதேநிலை திரும்ப வருகிறதோ என்ற கலக்கம் அனைத்து ரசிகர்கள் மனதிலும் உருவாகியுள்ளது.
ஐசிசி, 2014 முதல் சமீபத்தில் நடத்திய உலககோப்பை தொடர்வரை, கடைசியாக விளையாடிய 8-நாக்அவுட் போட்டிகளிலும் இந்தியா(ஆடவர் மற்றும் மகளிர் அணி) தொடர்ச்சியாக தோல்வியையே தழுவியுள்ளது. இதில், 4 அரைஇறுதி மற்றும் 4 இறுதிப் போட்டிகள் அடங்கும். 2019 உலகக்கோப்பை அரைஇறுதி ஆட்டம், 2017 மகளிர் உலகக்கோப்பை இறுதிப் போட்டிகளில் வெற்றியின் விளிம்பிற்கே வந்து தோற்ற ஆட்டங்களை, அவ்வளவு எளிதில் எந்த ஒரு கிரிக்கெட் ரசிகனாலும் மறந்துவிடமுடியாது. கிரிக்கெட்டின் கடவுள் என்று கொண்டாடப்பட்ட சச்சினுக்கு கூட அவரது கனவான உலககோப்பை வெகுகாலம் காத்திருந்தே கிடைத்தது. அனைத்து விதமான கோப்பைகளையும் வென்ற தோனி, தனது கடைசி உலககோப்பையை வெல்ல முடியாமல் வருந்திச்சென்றபோது அழாத ரசிகனும் கிடையாது. உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன் கோலி, தனது முதல் கோப்பையை வெல்ல முடியாமல் தவிப்பதும் வருத்ததிற்க்கு உரியதே. புத்துயிர் பெற்று, ஃபீனிக்ஸ் பறவையாக மீண்டு வந்த மகளிர் அணியும் கோப்பை வெல்லாதது சோகமே.
முக்கியமான தொடர்களில் அணியாக செயல்படுவது மிகமுக்கியமான ஒருவிஷயம், அதை கோப்பையை வென்ற ஒவ்வொரு அணிகளும் சிறப்பாக செய்திருக்கின்றன. 1983, 2007, 2011, 2013 ஆம் ஆண்டுகளில் நடந்த உலககோப்பைகளில் அதைதான் இந்தியா செய்தது. ஆனால், அதன்பிறகு நடைபெற்றத் தொடர்களில் அணியை ஒருவர் மட்டுமே சுமந்து செல்லவேண்டிய நிலை இருந்தது. அதுவே, அணியின் பலவீனமாக மாறியது. அதற்கு மிகச்சிறந்த உதாரணம் தோனி. அவர் இல்லாமல் இந்திய அணி தற்போது தடுமாறவே செய்கிறது. நேற்று நடந்த இறுதிப்போட்டியிலும், இந்திய மகளிர் அணி ஷஃபாலி வெர்மாவையே மிகவும் நம்பியிருந்ததும் தோல்விக்கு முக்கிய காரணம்.
அனைத்து அணிகளையும் தோற்கடிக்கக் கூடிய சிறந்த சர்வதேச வீரர்கள் இந்திய அணியில் உள்ளனர். ஆனால், அதேசமயம் ஒரு அணியாக அவர்கள் முக்கிய தொடர்களில் செயல்படுகிறார்களா என்பதும் யோசிக்கவேண்டிய விஷயமே. அப்படி, அணியாக இந்திய வீரர்கள் செயல்படும்போது, உலககோப்பை கனவு கோப்பை அல்ல. நம் நாட்டை அலங்கரிக்கும் தங்கக்கோப்பையே.