பருவமழை காலத்தில் தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் நல்ல மழைக்கு வாய்ப்பு

ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான பருவமழை காலத்தில் தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு காணப்படும் என்று இந்திய வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

நாடு முழுவதும் ஜூன் முதல் செப்டம்பர் மாதம் வரையிலான பருவமழை குறித்து இந்திய வானிலை ஆய்வுமையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி தெற்கு மற்றும் மத்திய இந்தியாவில் இந்த ஆண்டு நல்ல மழைப்பொழிவு காணப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய மாநிலங்களான குஜராத், மகாராஷ்டிரா மத்தியபிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா மாநிலங்களில் சராசரியாக 100 சதவிகித மழையளவு காணப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இதேபோல தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, தெலங்கானா மற்றும் கர்நாடக மாநிலங்களில் 97 சதவிகித மழைப்பொழிவு காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல கிழக்கு மற்றும் வடகிழக்கு பகுதிகளில் சராசரி அளவை காட்டிலும் குறைவான மழைப்பொழிவு காணப்படும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வடஇந்திய மாநிலங்களான ராஜஸ்தான் மற்றும் உத்தரபிரதேசத்தில் சராசரி அளவை காட்டிலும் குறைவாக அதாவது 94 சதவிகித மழைப்பொழிவு காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஜூன், ஜூலை மாதங்களில் மழையளவு குறைந்து காணப்பட்டாலும், அடுத்த மாதங்களில் நல்ல மழைப்பொழிவு காணப்படும் என்றும் அந்த அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது.

Exit mobile version